மதுரை மாநகரில் குற்றச்செயல்களை தடுக்க போலீஸ்–பொதுமக்கள் குழு அமைக்கப்படும்

மதுரை மாநகரில் குற்றச்செயல்களை தடுக்க போலீஸ்–பொதுமக்கள் குழு அமைக்கப்படும் என்று புதிய போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார்அகர்வால் தெரிவித்தார்.

Update: 2017-07-12 22:45 GMT

மதுரை,

மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த சைலேஷ்குமார்யாதவ் தென் மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மதுரை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புதிய கமி‌ஷனராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மதுரை நகரில் அமைதியான சூழல் நிலவுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல்துறையினர் பொதுமக்களிடம் நட்புணர்வோடு பழக அறிவுறுத்தப்படும்.

பொதுமக்கள், காவல்துறையினரிடையே நல்லுறவு ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை நகரில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார், பொதுமக்கள் இணைந்து செயல்பட போலீஸ்–பொதுமக்கள் குழு அமைக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது துணை கமி‌ஷனர்கள் சசிமோகன்(சட்டம்–ஒழுங்கு), ஜெயந்தி(குற்றப்பிரிவு), ஈஸ்வரன்(ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்