சிவகாசி அருகே குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்

சிவகாசி அருகே மணியம்பட்டி கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராமமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-12 22:00 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே ஊராம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மணியம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில கடந்த 15 நாட்களாக முற்றிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சிவகாசி யூனியன் அலுவலகத்திற்கு வந்தனர். அந்த நேரத்தில் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தினால் கிராமமக்கள் சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், கிழக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு பின்பு யூனியன் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த தாசில்தார்(பொறுப்பு) ராமநாதன் மற்றும் அதிகாரிகள் மக்களிடம் விரைவில் மணியம்பட்டி கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்