அந்தியூர் அருகே அடிதடி தகராறில் தாக்கப்பட்ட முதியவர் திடீர் சாவு
அந்தியூர் அருகே அடிதடி தகராறில் தாக்கப்பட்ட முதியவர் திடீர் என இறந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள கரட்டூர்மேடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 70). அவருடைய மனைவி செம்பாயி (65). கூலிதொழிலாளர்கள். இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் நடைபாதை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 10–ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு அடிதடியாக மாறியது. அப்போது பழனியப்பன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனியப்பனும், செம்பாயியும் பங்களாபுதூர் போலீசில் புகார் அளித்தார்கள். அப்போது போலீசார், ‘உங்களுடைய வீட்டு பத்திரத்தை கொண்டு வாருங்கள், அதைப்பார்த்து அதிகாரிகளை வைத்து நடைபாதையை அளந்து தருகிறோம்‘ என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே உடல்நிலை பாதிக்கப்பட்ட பழனிச்சாமி சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்தநிலையில் பழனிச்சாமியின் மகள் ஜெயலட்சுமி தந்தையை பார்க்க ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தார். இரவு 7 மணி அளவில் பழனிசாமி மகளிடம் டீ வாங்கி வரச்சொல்லி குடித்துள்ளார். அப்போது திடீரென அவர் இறந்துவிட்டார்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசில் செம்பாயி மேலும் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 10–ந் தேதி நடந்த தாக்குதலில் அடிபட்டுதான் தன்னுடைய கணவர் இறந்துவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பங்களாப்புதூர் போலீசார், இறந்த பழனிச்சாமியின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பழனிச்சாமியின் உடல் இன்று (வியாழக்கிழமை) பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பின்னரே வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமடையும் என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.