ஐகோர்ட்டு உத்தரவுப்படி நெல்லையில், வணிக வளாகத்தின் தரை தளம் சீல் வைப்பு

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நெல்லையில் உள்ள வணிக வளாகத்தின் தரை தளத்தை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.;

Update: 2017-07-12 20:30 GMT

நெல்லை,

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நெல்லையில் உள்ள வணிக வளாகத்தின் தரை தளத்தை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

வணிக வளாகம்

நெல்லையை சேர்ந்த சரத் இனிகோ என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

நெல்லை தெற்கு புறவழி சாலையில் பிரபல ஜவுளிக்கடையின் அடுக்கு மாடி வணிகவளாகம் உள்ளது. அங்கு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடம் முறையாக அனுமதி பெறாமல், விதிமுறையை மீறி கட்டப்பட்டு உள்ளது. நிரந்தர மின் இணைப்பும் பெறவில்லை. இந்த வணிக வளாகத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்கு முறையான வசதியும் இல்லை. கட்டிட பணிகள் முழுவதும் முடிவடையாத நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23–ந் தேதி வணிக வளாகம் திறக்கப்பட்டது.

விதிமுறை மீறல்

மேலும் அந்த வணிக வளாகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த வசதி செய்து தரப்படவில்லை. வணிக வளாகத்துக்கு வரும் வாகனங்கள் தெற்கு புறவழிச்சாலையில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் திடீரென்று வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் மக்கள் அவசரமாக வெளியே அவசர வழிகள் ஏற்படுத்தவில்லை. எனவே இந்த வணிக வளாகம் விதிமுறை மீறல் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கார் பார்க்கிங் இடத்தில் நகைக்கடை நடத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சீல் வைப்பு

நகைக்கடை வைத்து இருக்கும் தரை தளத்தை சீல் வைக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர உள்ளூர் திட்ட குழும மேற்பார்வையாளர்கள் நாராயணன், சுப்பிரமணியன், நெல்லை மாநகர செயற்பொறியாளர் செரீப், உதவி பொறியாளர் திருஞான சேகர் மற்றும் அதிகாரிகள் அந்த வணிக வளாகத்துக்கு வந்தனர்.

தரை தளத்தில் நகைகள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்களை அதிகாரிகள் வெளியேற்றி தரை தளத்தை சீல் வைத்தனர்.. –

மேலும் செய்திகள்