போலீசை கண்டித்து வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

போலீசை கண்டித்து வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-11 23:06 GMT

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு 2 யூனிட்டுகளில் 5 பிரிவுகளில் 1,830 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 2 ஆயிரத்து 500 நிரந்தர தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அனல்மின் நிலையத்திற்கு சென்று வர கண்காணிப்பு பொறியாளர் கையெழுத்திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டையை தொழிலாளர்கள் அனல்மின்நிலைய நுழைவு வாயிலில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் காண்பித்த பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் நேற்று காலை அனல்மின் நிலைய போலீசார் தொழிலாளர்களிடம் அடையாள அட்டை காண்பித்த பிறகு வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை காட்ட வேண்டும் என திடீரென கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வேலைநிறுத்த போராட்டம்

இதனால் ஏற்பட்ட தகராறில் போலீஸ் ஒருவர் அனல் மின்நிலைய தொழிலாளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அனைத்து தொழிலாளர்களும் அனல்மின் நிலையத்திற்கு பணிக்கு செல்லாமால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடந்ததால் வடசென்னை அனல்மின் நிலைய சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ராமமூர்த்தி மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தாமோதரன், விஜயன், ஜெயவேல், விநாயகமூர்த்தி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அனல்மின் நிலைய இயக்குதல் திறனாய்வு மற்றும் மேற்பார்வை பொறியாளர் தொழிலாளர்களிடம் வருத்தம் தெரிவித்து இது போன்று வாகன சோதனை செய்யப்படமாட்டாது என உறுதிமொழி அளித்தார். அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு சென்றனர்.


மேலும் செய்திகள்