காட்கோபர் ரெயில் நிலைய 1 ரூபாய் ‘கிளினிக்’கில் பெண்ணுக்கு பிரசவம் பெண் குழந்தை பெற்றெடுத்தார்

காட்கோபர் ரெயில் நிலையத்தில் உள்ள 1 ரூபாய் ‘கிளினிக்’கில் பெண்ணுக்கு பிரசவமானது. அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

Update: 2017-07-11 23:15 GMT

மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் நேற்று டிட்வாலாவில் இருந்து தாதர் நோக்கி மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி உண்டானது.

அந்த ரெயில் காட்கோபர் ரெயில் நிலையம் வந்ததும் பயணிகள் கார்டுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த கர்ப்பிணி பெண் ரெயிலில் இருந்து இறக்கப்பட்டு காட்கோபர் ரெயில் நிலையத்தில் உள்ள 1 ரூபாய் ‘கிளினிக்’கில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 2½ கிலோ எடை கொண்டதாக இருந்தது.

முதல் முறையாக...

பின்னர் தாய், சேய் இருவரும் அருகில் உள்ள ராஜவாடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ரெயில் விபத்துகளில் சிக்குபவர்களுக்காக கடந்த மே மாதம் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் காட்கோபர், தாதர், குர்லா, வடலா, முல்லுண்டு ஆகிய 5 ரெயில் நிலையங்களில் அவசர மருத்துவ அறைகள் என்ற பெயரில் இந்த 1 ரூபாய் ‘கிளினிக்’குகள் தொடங்கப்பட்டன.

இங்கு தினசரி ஏராளமானவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறார்கள். மேலும் 10 பேர் வரை அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகிறார்கள். முதல் முறையாக 1 ரூபாய் ‘கிளினிக்’கில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்