மும்பையில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு கிலோ ரூ.110–க்கு விற்கப்படுகிறது

மும்பையில் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.110–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2017-07-11 21:52 GMT

மும்பை,

மராட்டியத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. தக்காளி விளைச்சல் செய்யப்படும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மொத்த மார்க்கெட்டுகளுக்கு தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. இதன் விளைவாக தக்காளியின் விலை கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக கடந்த வாரம் மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தக்காளியின் விலை ரூ.110 என்ற உச்சத்தை தொட்டு உள்ளது.

விலை உயர்வு

சயான், அந்தேரி மற்றும் காட்கோபர் ஆகிய இடங்களில் ரூ.100 முதல் ரூ.110 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகிறது. தக்காளியின் இந்த கடுமையான விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்தேரி மார்க்கெட்டில் தக்காளி விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘ வரத்து குறைவால் தக்காளி விலை உச்சத்தை எட்டி உள்ளது. மொத்த மார்க்கெட்டுகளில் இருந்து நாங்கள் ஒரு கிலோ தக்காளி ரூ.75–க்கு வாங்கி கொண்டு வருகிறோம். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகே தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது ’’ என்றார்.

மேலும் செய்திகள்