குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் தெரிவித்தார்.

Update: 2017-07-11 23:00 GMT
நாகர்கோவில்,

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது மற்றும் குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தல் தொடர்பாக விழிப்புணர்வு வாகன பேரணி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் தலைமை தாங்கி வாகனப்பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–

‘குமரி மாவட்டத்தில், கடந்த 6 மாதத்தில் மட்டும் காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 26 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். மீதமுள்ள குழந்தைகளை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கவும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் போலீஸ் சரகத்தில், சப்–இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் (செல்போன் எண் 9486078232) தலைமையிலும், தக்கலை சரகத்தில் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் (9498196675) தலைமையிலும், குளச்சல் சரகத்தில் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் (9498192414) தலைமையிலும், கன்னியாகுமரி சரகத்தில் சப்–இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் (9443780056) தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புகார்களை, தனிப்படை அதிகாரிகளின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம்.

மேலும், திருட்டு மது மற்றும் அதிக ஒலி எழுப்பும்படி வாகனங்களில் மாற்றம் செய்துள்ளோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், நாகர்கோவில் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி, மதுவிலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு குமார், தனிப்படை இன்ஸ்பெக்டர் இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் அன்பு பிரகாஷ், பர்னபாஸ், கண்மணி, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, மற்றும் தனிப்படை சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்