சிறுமலையில் பற்றி எரிந்த காட்டு தீ
சிறுமலையில் பற்றி எரிந்த காட்டு தீ வனத்துறையினர் போராடி அணைத்தனர்
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையில் பழையூர், அகஸ்தியர்புரம், தென்மலை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் விலை உயர்ந்த பல அரிய வகை மரங்கள், மூலிகை செடிகளும் ஏராளமாக இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று மதியம் திடீரென சிறுமலையில் காட்டுத்தீ பற்றியது. அகஸ்தியர்புரத்தில் இருந்து தென்மலை செல்லும் மலைப்பாதையின் ஓரத்தில் தீப்பற்றி எரிந்தது. காற்று அடித்ததால் மற்ற இடங்களுக்கும் வேகமாக தீ பரவியது. இதில் விலை உயர்ந்த மரங்கள் கருகின.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் சிறுமலை வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்தனர். அவர்கள் மரக்கிளைகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கினர். மேலும், மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘மர்ம நபர்கள் யாரேனும் காட்டுக்கு தீ வைத்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.