ஓடும் பஸ்சில் மைனர் பெண் பாலியல் பலாத்காரம்: 2 அரசு பஸ் டிரைவர்கள்– கண்டக்டர் கைது

ஓடும் பஸ்சில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 அரசு பஸ் டிரைவர்கள்– கண்டக்டர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2017-07-11 22:00 GMT

மங்களூரு,

உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் இருந்து கடந்த 5–ந் தேதி இரவு ஒரு அரசு பஸ் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூருக்கு சென்றது. அந்த பஸ்சை டிரைவர் ஈரய்யா ஹிரேமட்(வயது 40) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக யுவராஜ் கட்டேகர்(45) என்பவரும், மாற்று டிரைவராக ராகவேந்திரா படகெரா(43) என்பவரும் இருந்தனர். அந்த பஸ்சில் மணிப்பாலை சேர்ந்த 15–வயது மைனர் பெண் உள்பட சில பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த பஸ் ராணிபென்னூர் அருகே சென்ற போது, பஸ்சில் பயணம் செய்த மைனர் பெண்ணை தவிர மற்ற பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி சென்றுவிட்டனர். இதனால் மைனர் பெண் மட்டும் பஸ்சில் தனியாக இருந்தார். இந்த நிலையில் டிரைவர்களான ஈரய்யா ஹிரேமட், ராகவேந்திரா படகெரா, கண்டக்டர் யுவராஜ் கட்டேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து, ஓடும் பஸ்சில் அந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

2 டிரைவர்கள்– கண்டக்டர் கைது

மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அந்த பஸ் ராணிபென்னூருக்கு சென்று விட்டது. பஸ்சில் இருந்து இறங்கி மைனர் பெண்ணும் சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 8–ந் தேதி அந்த மைனர் பெண் ராணிபென்னூரில் இருந்து மணிப்பாலுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் தனக்கு பஸ்சில் நேர்ந்த கொடுமையை பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடுப்பி மகளிர் போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவர்கள், கண்டக்டர் மீது புகார் செய்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக டிரைவர்களான ஈரய்யா ஹிரேமட், ராகவேந்திரா படகெரா, கண்டக்டர் யுவராஜ் கட்டேகர் ஆகிய 3 பேரையும் உடுப்பி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பஸ் பறிமுதல்

மேலும் அரசு பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்