ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட விவகாரம்: வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்

ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அடுத்த கட்டமாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-07-11 22:30 GMT

பெரியகுளம்

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு வரட்டாறு பகுதியில் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அருகே முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டம் உள்ளது. இங்கு ஏற்கனவே 2 கிணறுகள் உள்ளன. இந்த நிலையில் 3–வதாக ஒரு கிணறு வெட்டப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கிணற்றில் நீர்மட்டம் குறைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 171 பெண்கள் உள்பட 243 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டம் நடத்துவது என அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடிநீர் கேட்டு நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால் போலீசார் எங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதோடு குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இருந்த போதிலும் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

மேலும் செய்திகள்