உடலில் குத்தப்பட்ட கத்தியுடன் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு ஓடிய டிரைவர்
ராமநகர் அருகே உடலில் குத்தப்பட்ட கத்தியுடன் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு ஓடிய டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா டவுன் கலா நகரில் வசித்து வருபவர் அப்துல் வாகீத்(வயது 35). டிரைவரான இவர் ஆட்டோ மற்றும் சரக்கு வேன் ஓட்டி வருகிறார். இவர், நேற்று மதியம் வேலைக்கு செல்வதற்காக பி.எல்.ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் 6 பேர் திடீரென்று அப்துல் வாகீத்தை வழிமறித்தனர்.
பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் அப்துல் வாகீத் மீது தாக்குதல் நடத்தியதோடு, கத்தியால் அவரின் முதுகில் குத்திவிட்டு கத்தியை முதுகிலேயே சொருகிவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால், அப்துல் வாகீத்தின் உடலில் இருந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. இருப்பினும், அவர் ரத்தம் சொட்ட சொட்ட உடலில் குத்தி நின்ற கத்தியுடன் சென்னப்பட்டணா அரசு மருத்துவமனையை நோக்கி ஓடினார்.
வலைவீச்சுரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு ஓடிய அப்துல் வாகீத்தை பார்த்து மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அத்துடன், அவருடைய உடலில் குத்தி நின்ற கத்தியையும் அகற்றினர். இதுகுறித்து, அப்துல் வாகீத் சார்பில் சென்னப்பட்டணா கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். அத்துடன், தலைமறைவாக உள்ள மர்ம நபர்கள் 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
போலீசாரின், முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் வாகீத்தும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால், அந்த நபர்கள் தான் கத்தியால் குத்தி அப்துல் வாகீத்தை கொலை செய்ய முயற்சித்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.