அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார்

கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழியை சேர்ந்தவர் மூட்டைப்பூச்சி என்ற சம்பத்குமார்.

Update: 2017-07-11 22:00 GMT

புதுச்சேரி,

கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழியை சேர்ந்தவர் மூட்டைப்பூச்சி என்ற சம்பத்குமார்(வயது 24). இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. புதுவை பெரியகடை போலீஸ் நிலையத்தில் மட்டும் 4 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக பெரியகடை போலீசார் சம்பத்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். அங்கு அவர் விசாரணை கைதியாக இருந்து வந்தார். ஜெயிலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதுபற்றி தெரிய வந்ததும் சிறை அதிகாரிகள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு சம்பத்குமார் தப்பி ஓடி விட்டார். இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் சம்பத்குமாரை சிதம்பரத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்