கவர்னர் கிரண்பெடியை கண்டித்து காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம்: பஸ் - ஆட்டோக்கள் ஓடவில்லை

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கவர்னரை கண்டித்து காரைக்காலில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பஸ்கள் - ஆட்டோக்கள் ஓடாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2017-07-11 22:30 GMT
காரைக்கால்,

புதுச்சேரி சட்டசபைக்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.க.வை சேர்ந்த சாமி நாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்துவந்தார். இந்த விவகாரத்தில் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து புதுவையில் கடந்த 8-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

காரைக்காலில் மாங்கனி திருவிழா நடந்ததையொட்டி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அங்கு அன்றைய தினம் முழு அடைப்பு நடத்தப்படவில்லை. அதற்கு பதில் 11-ந் தேதி காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று காரைக்கால் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. மற்றும் படைப்பாளி மக்கள் கட்சிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தின.

போராட்டம் காரணமாக காரைக்காலில் உள்ள முக்கிய கடைவீதிகளான திருநள்ளாறு ரோடு, பாரதியார் ரோடு, மாதா கோவில் ரோடு மற்றும் அனைத்து வீதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார், வேன், லாரிகள், சரக்கு வாகனங்கள் ஓடவில்லை. ஆனால் ஒருசில தமிழக அரசு பஸ்கள் மட்டும் இயங்கின. அவற்றில் மாவட்ட எல்லை வரை போலீசார் பாதுகாப்பிற்காக சென்றனர். கிராமப்புறங்களுக்கு பஸ்கள் சரியாக இயங்காததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் ஏலம் விடப்படவில்லை. நேரு மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. ஒருசில தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. ஆனால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், அரசு சார்பு நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கியன.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பஸ் நிலையம், கடைவீதி, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். புதுச்சேரியில் இருந்து கூடுதலாக ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இந்த போராட்டத்தையொட்டி காரைக்காலில் எந்த இடத்திலும் அசம்பாவிதமோ சாலை மறியலோ எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்