கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி: நாராயணசாமி ஆய்வு

புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணியை முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார்.

Update: 2017-07-11 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை கடற்கரையில் பாறாங்கற்களை கொட்டி தூண்டில் முள்வளைவு அமைத்து ரூ.20 கோடி செலவில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., அரசு செயலாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வினை தொடர்ந்து முதல –அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசிடம் இருந்து பாரம்பரிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலாவுக்கு தேவையான நிதியுதவியை பெற்று வருகிறோம். தற்போது கடற்கரையை அழகுபடுத்த செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி ரூ.20 கோடி செலவில் நடக்கிறது.

சோலைநகர் முதல் வம்பாகீரப்பாளையம் வரை கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளது. பழைய சாராய ஆலையில் பண்பாட்டு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் மட்டும் ரூ.100 கோடி செலவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

கடற்கரையில் சேரும் மணல் அரித்துச் செல்லப்படாமல் தடுக்க தூண்டில் முள் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது புதுவைக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நாள்தோறும் அவர்களின் வருகையை அதிகரிக்கும் வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நீர் விளையாட்டுகள், படகு சவாரி, கடல்வள காட்சியகம் போன்றவை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்