தேர்தல் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு: முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 41 பேர் விடுதலை

தேர்தல் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு: முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 41 பேர் விடுதலை மேட்டுப்பாளையம் கோர்ட்டு தீர்ப்பு

Update: 2017-07-11 23:00 GMT

மேட்டுப்பாளையம்

கடந்த 2014–ந் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக சி.கோபாலகிருஷ்ணன், தி.மு.க. வேட்பாளராக ஆ.ராசா ஆகியோர் போட்டியிட்டனர். 2014–ம் ஆண்டு மார்ச் 21–ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்– காரமடை ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை பெண் அலுவலர் ராணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் தனியார் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் எம்.எல்.ஏ. பா.அருண்குமார் மற்றும் தி.மு.க.வினர் பறக்கும் படை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், விடுதி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் ராணி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை மேட்டுப்பாளையத்தில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குட்டி மணி என்பவர் இறந்து விட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 40 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனால் நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க.வினர் திரண்டு நின்றனர்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஆர்.சரவணபாபு, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 41 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஆ.ராசாவுக்கு அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டி.ஆர்.சண்முகசுந்தரம், கல்யாணசுந்தரம் ஆகியோர் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மேலும் செய்திகள்