ஆசிரியை கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்ட மாணவி மயங்கி விழுந்தார்
பேட்டை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்ட மாணவி மயங்கி விழுந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
பேட்டை,
நெல்லையை அடுத்த பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் மாணவி ஒருவர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை. எனவே பெற்றோரை அழைத்து வரும்படி மாணவியை ஆசிரியைகள் அறிவுறுத்தினர்.
ஆனால் அந்த மாணவி தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வரவில்லை. மாணவி மட்டும் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். இதனால் ஆசிரியைகள், மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி மனம் உடைந்து காணப்பட்டார்.
எலிமருந்தை சாப்பிட்டார்நேற்று காலை 11 மணி அளவில் அந்த மாணவி தண்ணீர் குடிப்பதற்காக பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சென்றார். அங்கு வைத்து அவர் எலி மருந்தை சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அந்த மாணவி மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மாணவி மயங்கி விழுந்த தகவல் அறிந்ததும் பள்ளிக்கூட வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அந்த மாணவியை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.