பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-07-11 22:30 GMT

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக தேயிலை விவசாயம் நலிவடைந்து வருகிறது. இதனால் பச்சை தேயிலைக்கு கட்டுப்படியான வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேயிலை விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் கூடலூர் பகுதியை சேர்ந்த சளிவயல், புளியாம்பாரா, ஸ்ரீமதுரை, எல்லமலை, ஆரோட்டுப்பாறை, செல்வபுரம், காந்திநகர் உள்பட 13 கிராமங்களை சேர்ந்த சிறு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கூட்டமைப்பு தலைவர் சளிவயல் சாஜி தலைமை தாங்கினார். செயலாளர் ரிச்சர்டு, பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.25 நிர்ணயம் வேண்டும். தேயிலை ஏல மையங்களில் தேயிலைத்தூளுக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.150 வழங்க வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள இன்கோசர்வ், டேன்டீ நிறுவனங்கள் குறைந்த விலையில் தேயிலைத்தூள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். பட்டா இல்லாத நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் விவசாய பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இது குறித்து கூட்டமைப்பு தலைவர் சளிவயல் சாஜி கூறியதாவது:–

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு கிடைத்த விலை இப்போது கிடைப்பது இல்லை. 1997–ம் ஆண்டு பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.22 கிடைத்தது. ஆனால் இன்றைக்கு அதில் பாதி விலை மட்டுமே கிடைக்கிறது. உற்பத்தி செலவு, கூலி, உரங்களின் விலை உயர்வு என பல மடங்கு அதிகரித்து விட்டது. தேயிலை விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்தும், பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலை ரூ.25 நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இதுதவிர அனைத்து தேயிலை விவசாயிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும். சிறு, குறு தேயிலை உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்க மானியம் வழங்க வேண்டும். ரசாயன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்