நூறு நாள் வேலை பணிப்பொறுப்பாளரை மாற்றக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நூறு நாள் வேலை பணிப்பொறுப்பாளரை மாற்றக்கோரி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-07-11 22:15 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை பணிப்பொறுப்பாளராக உள்ளவர், தனது பணியை தவறாக பயன்படுத்தி வருவதாக அந்த கிராம மக்கள் புகார் கூறினர். மேலும் நூறு நாள் வேலைக்கு தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாட்டுடன் பணியை ஒதுக்கி தருகிறாராம்.

வேண்டியவர் என்றால் வேலையை கூட செய்யாமல் பார்த்துக் கொள்கிறார் என்றும், வேண்டாதவர் என்றால் முதியவர் என்று கூட பார்க்காமல், வெகு தொலைவிற்கு சென்று வேலை செய்ய வைத்து வருகிறாராம். மேலும் நூறு நாள் வேலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறி வந்தனராம்.

ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பணிப்பொறுப்பாளர் இதுபற்றி அறிந்து, வேலை செய்யும் அனைவரையும் தரக்குறைவாக பேசி வந்தாராம். இந்தநிலையில் நேற்று உத்தப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மொண்டிக்குண்டு, குளத்துப்பட்டி, யு.வாடிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நேற்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தற்போது பணிப்பொறுப்பாளராக உள்ளவரை மாற்றி விட்டு, அவருக்குப் பதிலாக புதிதாக வேறு நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்