ராமேசுவரத்தில் தென்னந்தோப்பில் 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேசுவரத்தில் தென்னந்தோப்பில் 400 கிலோ கடல்அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேசுவரம்,
ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியில் வில்லாயுதம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கடல் அட்டைகள் பதப்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, பிரபு, சப்–இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது தோப்புக்குள் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்த 10–க்கும் மேற்பட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் 200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் என மொத்தம் 400 கிலோ கடல் அட்டைகள் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடல் அட்டைகளையும், பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனச்சரகர் சதீஷ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.