நெல்லை அருகே கொன்று கல்குவாரியில் வீசப்பட்ட என்ஜினீயரின் உடல், காருடன் மீட்பு

நெல்லை அருகே கொலை செய்யப்பட்டு கல்குவாரியில் வீசப்பட்ட என்ஜினீயரின் உடல் அழுகிய நிலையில் காருடன் மீட்கப்பட்டது.

Update: 2017-07-11 00:13 GMT

நெல்லை

நெல்லை அருகே கொலை செய்யப்பட்டு கல்குவாரியில் வீசப்பட்ட என்ஜினீயரின் உடல் அழுகிய நிலையில் காருடன் மீட்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக 3 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி ரைஸ்மில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(வயது 47). இவர் கம்ப்யூட்டர் என்ஜீனியர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று, அங்கு நீண்ட காலமாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முத்துச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

முத்துகிருஷ்ணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் விவகாரத்து பெற முயற்சி செய்தனர். விவாகரத்து தொடர்பாக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வக்கீலை முத்துகிருஷ்ணன் அடிக்கடி சந்திந்து வந்தார்.

இந்த நிலையில் முத்துகிருஷ்ணன், தாய் அம்மை முத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “எனது மகன் முத்துகிருஷ்ணன் கடந்த மே மாதம் 19–ந் தேதி நெல்லை சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பிறகு திரும்பி வரவில்லை. அவரை கண்டு பிடித்து தர வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. செய்தார்.

இது தொடர்பாக அவர், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். போலீசார் முத்துகிருஷ்ணன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவருடைய செல்போனை கைப்பற்றி அதில் உள்ள எண்கள் மூலம் விசாரணையை தொடங்கினர்.

முத்துகிருஷ்ணன் நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால் என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அந்த டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முத்துக்கிருஷ்ணன் விவகாரத்து விசயமாக அடிக்கடி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வக்கீல் அலுவலகத்துக்கு வருவார்.

அப்போது அங்கு வக்கீலாக பணியாற்றும், ராஜகோபால் காதல் மனைவியிடம் முத்துகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த ராஜகோபால், முத்துகிருஷ்ணன் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து பழகத்தை துண்டிக்காமல் சந்தித்து வந்தார்.

கடந்த மே மாதம் 19–ந் தேதி முத்துகிருஷ்ணன், பாளையங்கோட்டை வருவதை அறிந்த ராஜகோபால் தனது நண்பர்கள் 3 பேருடன் கே.டி.சி. நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்தனர். அவர் வந்ததும், அவருடைய காரிலே ராஜகோபாலும் நண்பர்களும் ஏறினர். காரை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து முத்துகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவரது உடலை சாக்குப்பையில் கட்டி, தாழையூத்து அருகே உள்ள பாப்பாக்குளத்தில் தண்ணீர் தேங்கி கிடந்த கல்குவாரியில் உடலை காருடன் தள்ளி விட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜகோபாலை போலீசார் கைது செய்தனர். அவருடைய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து நேற்று 60 அடி கல்குவாரியில் கொன்று வீசப்பட்ட முத்துகிருஷ்ணன் உடல் காருடன் மீட்கப்பட்டது. காலை 9 மணிக்கு தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசப் ஜெட்சன் தலைமையில் போலீசார் வந்தனர். பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஸ் தலைமையில் 7 வீரர்கள் வரழைக்கப்பட்டனர்.

தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் தலைமையில் அங்கு வந்து இருந்தனர். நெல்லை தாசில்தார் பலமுருகன் முன்னிலையில் மீட்கும் பணி நடந்தது.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்குள் சென்று மூழ்கி கிடந்த காரில் கயிறு கட்டினர். பின்னர் எந்திரம் மூலம் கார் தூக்கப்பட்டது. தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து கொண்டு இருந்த போது, காரின் எடை தாக்காமல் கயிறு அறுந்து விழுந்தது. பின்னர் இரும்பு ரோப் மூலம் கார் தண்ணீர் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

டிரைவர் சீட்டில் முத்துகிருஷ்ணன் உடல் அழுகிய நிலையில் இருந்தது. 49 நாட்கள் தண்ணீரில் உடல் இருந்ததால் தூர் நாற்றம் வீசியது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் டாக்டர்கள் அங்கேயே பரிசோதனை செய்தனர். ஒரு சில உடல் பாகங்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் கொண்டு சென்றனர். காரை தூத்துக்குடி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் முத்துகிருஷ்ணன் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவுப்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொன்று வீசப்பட்ட தூத்துக்குடி என்ஜினீயர் உடல் நெல்லை அருகே உள்ள கல்குவாரியில் மீட்கப்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்