விளாத்திகுளத்தில் மாட்டு வண்டிகளில் தொழிலாளர்கள் ஊர்வலம்

வைப்பாற்றில் மணல் அள்ள அனுமதிக்க கோரி, விளாத்திகுளத்தில் மாட்டு வண்டிகளில் தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2017-07-11 00:11 GMT

விளாத்திகுளம்,

வைப்பாற்றில் மணல் அள்ள அனுமதிக்க கோரி, விளாத்திகுளத்தில் மாட்டு வண்டிகளில் தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர்.

வைப்பாற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளதால், மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே வைப்பாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விளாத்திகுளம் வைப்பாறு பாலத்தின் அடியில் நேற்று காலையில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் கூடினர்.

உடனே விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, சப்– இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மாட்டு வண்டிகளில் தொழிலாளர்கள் விநாயகர் கோவில் வரையிலும் ஊர்வலமாக அணிவகுத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து 5 மாட்டு வண்டிகளில் தொழிலாளர்கள், விளாத்திகுளம் வைப்பாறு வடிகால்வாரிய உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் கொம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், உதவி கோட்ட பொறியாளர் முருகன், விளாத்திகுளம் தாசில்தார் செல்வகுமார் ஆகியோரிடம் வைப்பாற்றில் மணல் அள்ள அனுமதிக்குமாறு முறையிட்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்