புதுவை அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

புதுவையில் தாகூர் கல்லூரி, பாரதிதாசன் கல்லூரி, கலித்தீர்த்தாள்குப்பம் காமராஜர் கல்லூரி, தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கல்லூரி, கதிர்காமம் இந்திராகாந்தி கல்லூரி,;

Update: 2017-07-10 22:51 GMT

புதுச்சேரி,

வில்லியனூர் கஸ்தூரிபாய் கல்லூரி என 6 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், அரசு குழும கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் மொத்தம் 2,830 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த சேர்க்கை குழுவின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 2017–18ம் கல்வி ஆண்டில் இந்த கல்லூரிகளில் உள்ள பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ உள்ளிட்ட 27 இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக மொத்தம் 7,427 பேர் விண்ணப்பித்தனர். இதனை தொடர்ந்த கடந்த 30–ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

முதல் கட்ட கலந்தாய்வு

இதில் முதல் கட்ட கலந்தாய்வில் பி.காம் வணிகவியல் பாடத்தில் 420 இடங்கள், பி.காம் கூட்டுறவு மேலாண்மையில் 60 இடங்கள், பி.காம். கார்ப்பரேட் செக்ரெட்டரிஷிப்பில் 120 இடங்கள், பி.காம் பன்னாட்டு வணிகத்தில் 60 இடங்கள், பி.பி.ஏ.வில் 160 இடங்கள் மற்றும் பி.ஏ. பொருளாதாரத்தில் 120 என மொத்தம் 940 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான கலந்தாய்வு நேற்று காலை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உள்ள ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை அலுவலகத்தில் தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் கலந்து கொள்ள 176 மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 160 பேர் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு கல்வித்துறை செயலாளர் நரேந்திரகுமார் சேர்க்கை ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் உயர்க்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, ஒருங்கிணைந்த சேர்க்கை குழுவின் அமைப்பாளரும், பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் முதல்வருமான பூங்காவனம், இணை கன்வீனர்கள் பாலாஜி, ‌ஷரில் ஆன் சிவம், கதிர்காமம் கல்லூரி முதல்வர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்