அமைச்சர்கள் உத்தரவிட்டாலே போதும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தகவல்

வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்புக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டாலே போதுமானது என்று லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. கூறினார்.;

Update: 2017-07-10 22:48 GMT

புதுச்சேரி,

புதுவையில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்துக்கு கவர்னர் அனுமதி அளித்திருந்தார்.

இந்தநிலையில் வாரிய தலைவர்களின் பதவிக்கான காலக்கெடு முடிவடைவதையொட்டி அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க கவர்னர் ஒப்புதல் வழங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளதையொட்டி அவர் ஒப்புதல் வழங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

அமைச்சர்கள் உத்தரவு

இத்தகைய சூழ்நிலையில் முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்பு என்பது அந்தந்த வாரியங்கள் அடங்கிய துறை அமைச்சர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான். அதனால் வாரிய தலைவர்களுக்கு பதவி நீட்டிப்புக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நிர்வாக உத்தரவு வழங்கினாலே போதுமானது.

இதுதான் புதுவை அரசு நிர்வாக அலுவல் விதிகளில் உள்ளது. அதேபோல் தற்போது வாரிய தலைவர்களாக உள்ளவர்களின் எம்.எல்.ஏ. பதவியை பறித்துவிடலாம் என்று பேசி வருகின்றனர். சிலர் இதுதொடர்பாக கவர்னரிடமும் மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால் வாரிய தலைவர்களாக இருப்பவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவும் பதவி வகிக்கலாம் என்பது தொடர்பான சட்டதிருத்தம் கடந்த 2009–ம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்