மத்திய அரசின் உத்தரவு சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டது கவர்னர் கிரண்பெடி விளக்கம்
3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டது தொடர்பான மத்திய அரசின் உத்தரவு சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டது என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவிப்பிரமாணம் செய்துவைத்த கிரண்பெடி அவர்களை எம்.எல்.ஏ.க்களாக செயல்பட சட்டசபை செயலாளருக்கு தனது செயலாளர் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் அந்த கடிதத்தில் சில குறிப்புகளை எழுதி அதை கவர்னருக்கே சபாநாயகர் வைத்திலிங்கம் திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
தனக்கு உரிய அதிகாரத்தின்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது. இதுதொடர்பாக புதுவை தலைமை செயலாளரும் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எனக்குரிய அதிகாரத்தின்படி...அதன்பின் நியமிக்கப்பட்ட 3 பேரும் சபாநாயகரை சந்தித்து பதவிப்பிரமாணம் செய்து வைக்க கேட்டுள்ளனர். ஆனால் சபாநாயகர் அவர்களிடம் மழுப்பலான பதில் தந்துள்ளார்.
அதன்பின்னரே அவர்கள் என்னை சந்தித்து எனக்குரிய அதிகாரத்தின்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்க கேட்டார்கள். அதற்கு பின்னரே பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.
சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டதுஇதுகுறித்த விவரங்கள் மத்திய அரசுக்கும், சபாநாயகர் அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய நிலையில் சபாநாயகரின் அலுவலகம், உரிய அதிகாரம் பெற்றவர்களிடம் இருந்து தங்களுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை என்று கடிதத்தை திருப்பி அனுப்பிவிட்டது.
இதுதொடர்பாக மேல் நடவடிக்கைக்கு நாங்கள் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். மத்திய அரசின் உத்தரவினை புதுவை அரசும் அரசிதழில் வெளியிட்டுள்ளது என்பது பற்றியும் சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.