ஏரியில் மணல் கடத்தல் லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பெரியபாளையம் அருகே ஏரியில் இருந்து மணல் கடத்துவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றிச்சென்றதாக கூறி 4 லாரிகளை சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2017-07-10 21:54 GMT

பெரியபாளையம்,

பெரியபாளையம் அருகே உள்ள 82.பனப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சீஞ்சேரி கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடு மண் எடுக்க கனிம வளத்துறையும், மாவட்ட நிர்வாகமும் 40 நாட்களுக்கு தனி நபருக்கு அனுமதி அளித்தது.

கடந்த சில நாட்களாக இந்த ஏரியில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. அனுமதி அளித்த நாட்களுக்குள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இரவு–பகலாக நாள்தோறும் சவுடு மண் மற்றும் ஏரியில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் இட்டாச்சி எந்திரங்களை கொண்டு பெரிய, பெரிய பள்ளங்களை தோண்டி நள்ளிரவிலும், விடியற்காலை நேரத்திலும் மணல் கடத்துவதாக கூறி விவசாயிகள் கடந்த மாதம் 29–ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் எச்சரிக்கை

தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது சவுடு மண் குவாரியில் எங்கெல்லாம் பள்ளம் எடுத்தார்கள். எத்தனை இட்டாச்சி எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. எத்தனை மீட்டர் ஆழத்தில் மண் எடுத்தனர். லாரிகளில் தார்பாய் போட்டு மூடிக்கொண்டு செல்கின்றதா? என்று ஆய்வு செய்தார்.

மேலும், விதிமுறைகளை மீறி சவுடு மண் குவாரி செயல்பட்டால் சம்பந்தபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராத தொகையை வசூலிப்போம் என்று எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றார். ஆனாலும் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

4 லாரிகள் சிறை பிடிப்பு

இந்த நிலையில் நேற்று காலை குவாரியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் பனையஞ்சேரி ஊர் வழியாக சென்றது. கிராமமக்கள் ஒன்று சேர்ந்து குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பில் புத்தகத்துடன் அங்கிருந்த ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும், ஊரின் உள்ளே வந்த லாரிகளை பொதுமக்கள் மடக்கி பிடிப்பதை அறிந்த லாரி டிரைவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பொதுமக்களை கையெடுத்து கும்பிட்டு விட்டு கெஞ்சி கூத்தாடி தங்களது லாரிகளை மீட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இந்த பிரச்சினைக்கு பின்னும் மறைவிடத்தில் இருந்து 4 லாரிகளுக்கு பில் போட்டு மணல் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராம மக்கள் மணல் ஏற்றி வந்த அந்த லாரிகளை சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். இதனால் சவுடு மண் குவாரியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் சுற்றி வளைத்து பறிமுதல் செய்த அந்த 4 லாரிகளையும் ஒப்படைத்தனர்.

மேலும், கலெக்டர் தலைமையில் வருவாய் துறையினரும், கனிம வளத்துறை அதிகாரிகளும் வந்து ஏரியை ஆய்வு செய்த பின்னர்தான் மண் அள்ள அனுமதி அளிப்போம் என்றும் பொதுமக்கள் கூறினர்.

பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டோம் அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னரே மீண்டும் குவாரி இயங்கும் அதுவரையில் தற்காலிகமாக சவுடு மண் குவாரி இயங்காது என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்