மங்களூரு கலவரத்திற்கு மந்திரி ரமாநாத்ராய் காரணம் எடியூரப்பா குற்றச்சாட்டு

மங்களூரு கலவரத்திற்கு மந்திரி ரமாநாத்ராய் தான் காரணம் என்று எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2017-07-10 21:37 GMT

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா துமகூரு மாவட்டம் துருவகெரேயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கலவரம் ஏற்பட்டதற்கு அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி ரமாநாத்ராய் தான் காரணம். இதில் சித்தராமையாவுக்கும் பொறுப்பு உள்ளது. சித்தராமையா சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். அவருக்கு அதிகார போதை தலைக்கு ஏறியுள்ளது. அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜனதா எம்.பி.க்கள் ஷோபா, நளின்குமார் கட்டீல் ஆகியோர் மீது இந்த அரசு வழக்கு போட்டுள்ளது. இதன் மூலம் சித்தராமையா கீழ்மட்டத்திற்கு இறங்கியுள்ளார்.

இவருக்கு சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க அருகதை இல்லை. போராட்டக்காரர்களை ஒடுக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. மதக்கலவரத்தை உருவாக்கி, அதன் மூலம் எங்களுக்கு ஆதரவாக உள்ள நிலையை தடுக்க இந்த அரசு சதி செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 25–க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் எடுத்துக் கூறியுள்ளேன். உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். பா.ஜனதாவை பழிவாங்க சதித்திட்டம் தீட்டப்படுகிறது. சித்தராமையா உடனே மந்திரிகள் ரமாநாத்ராய், யு.டி.காதர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்