பூந்தமல்லியில் கோவில் விழா நடத்துவதில் இரு கோஷ்டிகள் மோதல்;

பூந்தமல்லியில் அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவை நடத்துவதில் இருகோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினரையும் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Update: 2017-07-10 22:45 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லி, கீழ்மா நகர் பகுதியில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா நடத்துவது குறித்து பேசப்பட்டது. அப்போது தனி நபர் ஒருவர் மட்டும் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தனியாக திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இதனால் கோவில் ஆடி திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசில் புகார்

இதுகுறித்து இரு தரப்பினரும் பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக பூந்தமல்லி தாசில்தார் லட்சுமணன் இரு தரப்பில் இருந்தும் 5 பேர் வீதம் 10 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை, பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் அதற்கு இருதரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

மீண்டும் பேச்சுவார்த்தை

ஆனால் அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று இருதரப்பினரும் கூறியதையடுத்து மீண்டும் வரும் 15–ந்தேதி தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றபோது இரு தரப்பினரும் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக ஆரவாரம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைத்து விட்டனர்.

கோவிலை சுற்றி பொதுமக்கள்

கோவிலை தனி நபர் யாரும் ஆக்கிரமிப்பு செய்து விடக்கூடாது என்று கருதி முடியாது என்று அந்த கோவிலை சுற்றி பொதுமக்கள் அமர்ந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் இருக்க கோவில் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்