விவேகானந்தா படகு சீரமைப்பு பணிக்காக சின்னமுட்டம் கொண்டுவரப்பட்டது

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்ட விவேகானந்தா படகு சீரமைப்பு பணிக்காக சின்னமுட்டம் கொண்டுவரப்பட்டது.

Update: 2017-07-10 22:45 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபமும் மற்றொரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துவர தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் விவேகானந்தா படகு 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.1 கோடி செலவில் வாங்கப்பட்டது. அதன்பின்பு 2015–ம் ஆண்டு படகு புதுப்பிக்கப்பட்டது.

தற்போது இந்த படகை  சீரமைக்க ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. சீரமைப்பு பணிக்காக நேற்று விவேகானந்தா படகு கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்திற்கு கொண்டு வரப்பட்டு கரையில் ஏற்றப்பட்டது.  

இந்த பணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சுடலைமுத்து, உதவி மேலாளர்(தொழில்நுட்பம்)ஜோசப்செல்வராஜ், பொறியாளர் அசோக், முத்துவேல், தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக பாதுகாப்பு அதிகாரி மாரிசெல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. முன்னதாக விவேகானந்தா படகுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 15–ந் தேதி முதல் விவேகானந்தா படகு போக்குவரத்திற்கு கொண்டு வரப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்