ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் 2 நாளில் ஒரு அடி உயர்ந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,600 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 2 நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.

Update: 2017-07-10 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் அந்த 2 அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கடந்த 7-ந்தேதி கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் கொட்டியது.

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,600 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அருவிகளில் கூடுதலாக தண்ணீர் விழுகிறது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்பாசனத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை காவிரி ஆற்றில் படகில் சென்று அளந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு சென்று நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

மேலும் தொங்குபாலம், பார்வை கோபுரம் ஆகிய இடங்களுக்கு அவர்கள் சென்று அருவிகளில் கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்தனர்.

தீயணைப்புத்துறையினர், போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக குளிக்குமாறும், பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் செல்லுமாறு அறிவுறுத்தினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,912 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணிக்கு 2,687 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 2,500 கனஅடிக்கு மேல் உள்ளதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்கிறது. கடந்த 8-ந்தேதி காலை 8 மணிக்கு 20.09 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று முன்தினம் 20.48 அடியாக உயர்ந்தது. நேற்று 21.09 அடியாக நீர்மட்டம் இருந்தது.

அதாவது கடந்த 2 நாட்களில் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. மேலும் அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. 

மேலும் செய்திகள்