இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி கொலை வழக்கில் 2 பேர் கைது
இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;
மும்பை,
இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 27 வயதான இவர், மாடலிங் தொழிலும் ஈடுபட்டு வந்தார். அத்துடன் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த 2013–ம் ஆண்டில் வெளியான ‘ராஜ்ஜோ’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த மாதம் 12–ந் தேதி தன்னுடைய வீட்டில் கிரித்திகா சவுத்ரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கொலை பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
நடிகை கிரித்திகா சவுத்ரியின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என பலரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், பிணமாக மீட்கப்பட்ட சில நாட்களுக்கு முன்பு நடிகை கிரித்திகா சவுத்ரியுடன் 2 பேர் அவரது வீட்டுக்கு சென்றதாகவும், அதன்பின்னர் அவரை தான் பார்க்கவில்லை என்றும் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்து வரும் காவலாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொலையாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர். மேலும், அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், அவர்களது பெயர் ஷகில் நசீம்கான் (வயது 33) மற்றும் பாசுதாஸ் (40) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்த நடிகை கிரித்திகா சவுத்ரி, ஏற்கனவே திருமணம் ஆனவர். பின்னர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மும்பையில் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.