ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்– ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-10 22:30 GMT

ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி அருகே உள்ள வேலூர்– அன்னம்பட்டி பஞ்சாயத்தில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை.

இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு சென்று விட்டனர். அலுவலகத்தில் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு ஒட்டன்சத்திரம்–திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மேலும் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசனும் அங்கு வந்தார். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் எஸ்.மேட்டுப்பட்டியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தண்ணீர் கேட்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்போஸ்கோ, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்