டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

அரக்கோணம் அருகே டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-10 00:15 GMT

அரக்கோணம்

அரக்கோணம் அருகே டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் அருகே உள்ள அல்லியப்பன்தாங்கல் கிராமம், பொன்னியம்மன் கோவில் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கிராமமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரக்கோணம் தாசில்தார் பாஸ்கர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் ஆகியோரிடம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று அல்லியப்பன்தாங்கல் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ள இடத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், மாணவ, மாணவிகள் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ள கட்டிடத்திற்கு முன்பாக அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாசில்தார் பாஸ்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘அல்லியப்பன்தாங்கல் கிராமத்தில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் இந்த வழியாக தான் நடந்து சென்று வருகின்றனர். இதே போல் வேலைக்கு தினமும் 100–க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் ‘குடி’மகன்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றனர்.

இதனையடுத்து தாசில்தார் பாஸ்கர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கூறுகையில் புதிதாக அமைக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் உங்களின் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்