நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை பார்த்தவர் மர்மசாவு

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்டவேலை பார்த்தவர் கல்குவாரி குட்டையில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இந்த மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-07-09 23:15 GMT
திருச்சி,

பிரபல தமிழ் சினிமா நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் திருச்சி. இவருக்கு சொந்தமான வீடு திருச்சி காஜாமலை அருகே பிச்சையம்மாள் காலனி பகுதியில் உள்ளது. இங்குள்ள அய்யனார் கோவில் அருகே கல்குவாரி குட்டையில் தேங்கி கிடந்த தண்ணீரில் நேற்று காலை ஆண் பிணம் மிதந்தது. இதனை கண்ட அந்த பகுதியினர், இதுகுறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் அங்கு சென்று தண்ணீரில் பிணமாக மிதந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யாரென்று முதலில் தெரியவில்லை. பின்னர் அந்த பகுதியினரிடம் விசாரித்தபோது அவர், புதுக்கோட்டை மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சக்தி என்கிற ஆறுமுகம் (வயது 55) என்பது தெரியவந்தது.

இவர் நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை பார்த்ததும், மேலும் காஜாமலை பகுதியில் உள்ள சிலரது வீடுகளில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் திடீரென மாயமாகி விட்டார். அவரை உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் தான் அவர் கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்துள்ளார்.

ஆறுமுகம் கல்குவாரி குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்டவேலை பார்த்தவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்