மணல் குவாரிக்கு 3-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்களால் பரபரப்பு

நெ.2 கரியமாணிக்கம் மணல் குவாரிக்கு 3-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-07-09 23:00 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

மண்ணச்சநல்லூர் தாலுகா கிளியநல்லூர் மற்றும் திருவாசி கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் மணல் குவாரிகளில் இணையதள சேவை மூலம் முன்பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கு மணல் விற்பனையை திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். மேலும் நெ.2 கரியமாணிக்கம் மணல் குவாரி உள்பட 9 குவாரிகளில் இணையதள சேவை முன்பதிவு விரைவில் தொடங்கப்படும், அதுவரை அந்த குவாரிகள் செயல் படாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அன்று மாலை நெ.2 கரியமாணிக்கம் மணல் குவாரிக்கு வந்த ஏராளமான லாரிகளில் மணல் ஏற்றப்பட்டது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, இந்த குவாரிக்கு இணையதள சேவை தொடங்காத நிலையில் எவ்வாறு மணல் வினியோகம் செய்யப்படுகிறது என்று கேட்டு, குவாரியை முற்றுகையிட்டு மணல் ஏற்றப்பட்ட 47 லாரிகள் மற்றும் அதற்கு அனுமதி அளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இரவுவரை நடைபெற்ற இந்த போராட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன்தினமும் மணல் குவாரியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மணல் அள்ளப்பட்டது குறித்து உரிய பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் 3-வது நாளாக நேற்றும் ஏராளமான பொதுமக்கள் மணல் குவாரியில் திரண்டு காலவரையறையின்றி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்து பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) குவாரி நடைமுறை குறித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு உங்களது கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதுவரை சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம், என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மணல் குவாரியை முற்றுகையிடும் முடிவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்