சரக்கு ஆட்டோ வாய்க்காலில் கவிழ்ந்து பெண் பலி 11 பேர் படுகாயம்

மணமேல்குடி அருகே சரக்கு ஆட்டோ வாய்க்காலில் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 11 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2017-07-09 22:45 GMT
மணமேல்குடி,

மணமேல்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் சின்னையா. இவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் அவரது உறவினர்கள் 15 பேர் மதுரையில் உள்ள அழகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். சரக்கு ஆட்டோவை சின்னையா ஓட்டினார். அவர்கள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் அதே சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.நேற்று அதிகாலை அந்த சரக்குஆட்டோ கட்டுமாவடி சாலையில் உள்ள திருவப்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சின்னையா மற்றும் அதில் பயணம் செய்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி, சந்தியன், மணிமேகலை, துரை, மணிகண்டன், சரத்குமார், கிருஷ்ணமூர்த்தி, பிரியங்கா, சிந்து, வெள்ளையம்மாள், பிரேமா ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர் களை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பிரேமா(25) என்பவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 11 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தவிபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்