கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கற்களை உடைத்து பார்த்து தரத்தை சோதித்த கலெக்டர்

பல்நோக்கு பயன்பாட்டு மைய கட்டுமான பணியை பார்வையிட்ட கலெக்டர், பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கற்களை உடைத்து பார்த்து அதன் தரத்தை சோதித்தார்.

Update: 2017-07-09 23:00 GMT
கரூர்,

கரூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகராட்சி அலுவலக புதிய கட்டிட கட்டுமான பணிகளையும், ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்நோக்கு பயன்பாட்டு மைய கட்டிடத்தையும் கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

ரூ.13 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குளத்துப்பாளையம் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளையும், பசுபதிபாளையம் சுரங்கப்பாதை பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின் போது பல்நோக்கு பயன்பாட்டு மைய கட்டுமான பணிக்கு வைக்கப்பட்டிருந்த செங்கற்களை தண்ணீரில் மூழ்கடித்து உடைத்து பார்த்து அதன் தரத்தினை ஆய்வு செய்தார். மேலும் தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்திட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது கலெக்டர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

கரூர் நகர மற்றும் மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பயணிகள் போக்குவரத்து நெரிசலின்றி புறவழிச்சாலை வழியாக நகருக்கு வெளியே செல்ல ஏதுவாக பசுபதிபாளையம் மற்றும் குளத்துப்பாளையம் பகுதிகளில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையர் அசோக்குமார், உதவி கலெக்டர் பாலசுப்ரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், நகராட்சி உதவிப்பொறியாளர் பேரின்பம், கரூர் தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்