செப்டம்பர் மாதம் 15-ந் தேதி நடக்கும் ம.தி.மு.க. மாநாடு தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்

தஞ்சையில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி நடக்கும் ம.தி.மு.க. மாநாடு தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று வைகோ பேசினார்.

Update: 2017-07-09 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு துணை பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சின்னப்பா, சந்திரசேகரன், வீரபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் சோமு, சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் உதயகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

தி.மு.க., அ.தி.மு.க.விற்கு அடுத்ததாக தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக வேரூன்றிய கட்சி ம.தி.மு.க. தான். பேரறிஞர் அண்ணா தொடங்கிய தி.மு.க.விற்கு ஏற்படாத சோதனைகளா? நாம் ம.தி.மு.க.வை தொடங்கியபோது பேரலை எழுந்தது. அண்ணா பிறந்தநாளை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 பெரிய கட்சிகளும் பெரிய அளவில் நடத்தியது கிடையாது. நாம் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வருகிறோம்.

கட்சி தொண்டர்களை பற்றி மட்டும் சிந்தித்து கொண்டு இருக்கிறேன். வீறுகொண்ட இயக்கமாக ம.தி.மு.க. வந்துவிடக்கூடாது என பொது எதிரியாக நம்மை நினைக்கின்றனர். மீத்தேன் திட்டம், காவிரியின் குறுக்கே அணை கட்டுதல், மது விலக்கு, நதிநீர் இணைப்பு, ஈழப்பிரச்சினை போன்ற ஒவ்வொரு பிரச்சினைக்கும் முதல் குரல் கொடுத்து வருகிறோம். கடந்த 10 மாதங்களில் அரசியலில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். ஊழல் நிர்வாகம் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று சொல்லக்கூடிய ஒரே தகுதி ம.தி.மு.க.விற்கு மட்டும் தான் உள்ளது. அதற்கு அஸ்திவாரம் போடும் மாநாடாக தஞ்சை மாநாடு இருக்கும். நமக்கு மாற்றம் வரும். விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தஞ்சை தரணியில் நடக்கும் மாநாடு தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தஞ்சையில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநில மாநாட்டை எழுச்சியுடனும், தமிழ்நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விதத்திலும் நடத்துவது, விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகையையும், நிவாரணத்தையும் வழங்க மத்திய, மாநிலஅரசுகளை கேட்டு கொள்வது, கதிராமங்கலத்தில் மக்களுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கையை கண்டிப்பது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்தியஅரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மணி, மாவட்ட செயலாளர்கள் மோகன், பாலசந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்