வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 1,217 வாக்குச்சாவடிகளில் நடந்தது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,217 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2017-07-09 22:45 GMT
திருவண்ணாமலை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு சிறப்புப் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை, குறிப்பாக 18 முதல் 21 வயது வரை உள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்த காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 9-ந் தேதி மற்றும் 23-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,217 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது.

இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களும் கலந்து கொண்டனர்.

முகாமில் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தல் மற்றும் பெயர் சேர்த்தலுக்கான படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டது. இருப்பினும் நேற்று பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும் செய்திகள்