தமிழ் சமுதாயத்தை தலை நிமிரச் செய்ய உண்மையான தேசப்பற்றாளர்கள் தேவை

வீழ்ந்து கிடக்கும் தமிழ் சமுதாயத்தை தலை நிமிரச் செய்ய உண்மையான தேசப்பற்றாளர்கள் தேவை என்று புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் கூறினார்.

Update: 2017-07-09 23:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே நேற்று இரவு மக்கள் பாதை என்ற இயக்கம் சார்பில் கூட்டம் நடந்தது. தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் தலைமை தாங்கினார். சென்னை களப்பணி ஒருங்கிணைப்பாளர் உமர் முக்தார், தறி திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசியதாவது:-

புதுவையில் மக்கள் பாதை தொடங்குகிறது. பாரதி உலா வந்த பூமி. பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த பூமி இது. நாட்டு பற்றும், மொழிபற்றும் நிறைந்த புதுவை மண் என்னை இயல்பாக ஈர்த்தது. அதனால் தான் ஆவலுடன் இங்கு வந்தேன்.

தமிழகம், புதுவையில் மகத்தான மாற்றம் மற்றும் ஏற்றங்களை உருவாக்குவதற்கு அடித்தளமாக இந்த நிகழ்ச்சி அமையும் என்று நம்புகிறேன். நமது தேசத்திற்கு என்ன வேண்டும் என்ற தேவையில் இருக்கிறோம். எங்கள் நாட்டில் அறிவு, ஆற்றல், திறமை இருக்கிறது. ஆனால் உண்மை என்ற ஒன்று மட்டும் இல்லை. அதற்கான பயணத்தை தொடங்கிவிட்டோம்.

மக்கள் பாதை, தேர்தல் பயணத்தை நோக்கிய பாதையா? பயணமா? என்று கேட்கலாம். தேர்தல் அரசியலை தாண்டி, தமிழ் சமூகம் அடுத்த தலைமுறை மேலோங்க வேண்டும் என்பதற்கான மக்கள் பாதை இயக்கம் இது. நேர்மையான சமூகம் உருவாகிவிட்டால், நேர்மையான அரசியல் தன்னால் ஏற்பட்டு விடும். இந்த சமூகத்தை மாற்றிவிட முடியும்.

தமிழகம் முழுவதும் 400 விவசாயிகள் வறுமையாலும், கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வல்லரசு என்று சொல்லும் தேசத்தில் விவசாயிகள் இறப்பது நல்ல அறிகுறி கிடையாது. விவசாயிகள் செத்து மடிவது நம்மையெல்லாம் சிந்திக்க செய்கிறது.

வீழ்ந்து கிடக்கும் என் தமிழ் சமூகத்தை தலை நிமிர்த்துவதற்கு உண்மையான தேச பற்றாளர்கள் தேவை. மக்கள் பாதையில் இளைஞர்கள் பயணிக்க தொடங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் இருந்து தான் வல்லரசு கனவு தொடர வேண்டும். கிராமத்தில் உள்ள விவசாயிகள், உழைக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையில் என்றைக்கு வறுமை போகிறதோ, அன்றைக்கு தான் வல்லரசு கனவை காணும் தகுதியை நாம் பெறுவோம். எனவே கிராமங்களில் இருந்து வளர்ச்சியை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தலைமை அலுவலக நிர்வாகி பிரபாகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞர்கள், சிறுவர்களின் சிலம்பாட்டம் நடைபெற்றது. முடிவில் புதுவை ஒருங்கிணைப்பாளர்கள் குரல் அமுதன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

மேலும் செய்திகள்