திருவொற்றியூரில் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய வாலிபர் மாயம்

திருவொற்றியூரில் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய வாலிபர் மாயமானார். கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

Update: 2017-07-09 22:30 GMT

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள கிளிஜோசியம் நகரில் வசித்து வந்தவர் அர்ஜூன் (வயது 18). இவர், இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்த அர்ஜூன், தனது அண்ணன் ராஜாவுடன் அதே பகுதியில் கடலில் குளிக்கச் சென்றார். கடலில் குளித்து கொண்டிருந்த அர்ஜூன் திடீரென ராட்சத அலையில் சிக்கிக்கொண்டார்.

கடலில் தத்தளித்த அர்ஜூனை அவருடைய அண்ணன் ராஜா காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் அர்ஜூனை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது.

இதுபற்றி ஊருக்குள் சென்று ராஜா தெரிவித்தார். மேலும் இதுபற்றி திருவொற்றியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக போலீசார், கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் அர்ஜூனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 2 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் அர்ஜூன் கிடைக்கவில்லை. அதற்குள் இருட்டி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

அர்ஜூனின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர், கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவரை தேடும் பணி இன்றும் தொடரும் என தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்