லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ரவுடி ஸ்ரீதர் மகனிடம் போலீசார் விசாரணை

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ரவுடி ஸ்ரீதர் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2017-07-09 22:15 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டவர். அவர் வியாபாரிகளை மிரட்டி குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர் மீது சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கும் உள்ளது. சென்னை அமலாக்கப்பிரிவு போலீசார் காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள இவரது பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி சீல் வைத்துள்ளனர். இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து சென்னை வந்த ஸ்ரீதரின் மனைவியை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ் (வயது 24) லண்டனில் இருந்து மலேசியா வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வருவதாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் தெரியவந்தது. இது குறித்து அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் தனிப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையம் வந்த சந்தோஷை மடக்கி பிடித்து விசாரித்தனர். சென்னை அமலாக்கப்பிரிவு போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சந்தோஷை காஞ்சீபுரத்திற்கு அழைத்து சென்று ஸ்ரீதர் எங்கு உள்ளார் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி நிருபர்களிடம் கூறும்போது:–

ரவுடி ஸ்ரீதர் எங்கு உள்ளார் என்பது குறித்து அவரது மகனிடம் விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில்தான் அவர் எங்கு உள்ளார் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்