கோவை காந்திபுரத்தில் கட்டப்படும் முதல் கட்ட மேம்பாலம் இந்த மாத இறுதியில் திறக்கப்படுகிறது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

கோவை காந்திபுரத்தில் கட்டப்படும் முதல் கட்ட மேம்பாலம் இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.;

Update: 2017-07-09 23:00 GMT
கோவை,

கோவை காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக ரூ.160 கோடி செலவில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. கோவை நஞ்சப்பா ரோட்டில் இருந்து சத்திரோடு ஆம்னி பஸ் நிலையம் வரை 1¾ கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் கட்ட மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து விட்டது.

தற்போது மேம்பாலத்தில் வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகள் முடிந்தாலும் மின்விளக்கு கம்பங்கள் பொருத்தும் பணி அடுத்தகட்டமாக நடைபெற உள்ளது. மேலும் பார்க் கேட் சிக்னல் உள்ள பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற் காக அந்த பகுதியில் தனியார் இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

வெளியூர் பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள் நேரடியாக நஞ்சப்பா சாலை யில் செல்ல முடியாது. இதனால் வெளியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்கள் பார்க் கேட் சிக்னலில் அமைக்கப்பட்டு வரும் ரவுண்டானாவை சுற்றி அதன்பின்னர் பாலத்தின் மேல் செல்லும் வகையில் சாலை அமைக்கும் பணிகள் இரவு-பகலாக நடைபெற்று வருகிறது.

காந்திபுரம் 2-வது கட்ட மேம்பால பணிகள் 100 அடி சாலை கல்யாண் பகுதியில் இருந்து சின்னசாமி சாலை மின்மயானம் வரை 1602 மீட்டர் தூரத்துக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2-வது கட்ட மேம்பாலம் அமைக்க வசதியாக மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பிகள் ரூ.16 கோடி செலவில் சாலையில் பதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 100 அடி சாலையின் இருபுறமும் வாகனங்க ளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு மேம்பால பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

மேம்பால பணிகளுக்காக காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால், காந்திபுரம், சத்திரோடு, ரத்தினபுரி, ஆவாரம்பாளையம் ரோடு, சித்தாபுதூர், வி.கே.கே.மேனன்ரோடு என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆவாரம்பாளையம் ரோடு ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதாலும், போக்குவரத்து திருப்பி விடப்படுவதாலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே காந்திபுரம் முதல்கட்ட பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

முதல்கட்ட மேம்பாலத்தில் வர்ணம் தீட்டும் பணிகள் இன்னும் 15 நாட்களில் முடிவடைந்து விடும். மேலும் பார்க்கேட் சிக்னல் பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இந்த மாத இறுதியில் முடிவடைந்து முதல்கட்ட மேம்பாலத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக முதல்-அமைச்சரின் தேதிக்காக காத்திருக்கிறோம். முதல் கட்ட மேம்பாலம் திறக்கப்பட்ட பின்னர் காந்திபுரம் மற்றும் சத்திரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.

காந்திபுரம் 2-வது கட்ட மேம்பால பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். உக்கடம் பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்