அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராமத்தை விட்டு வெளியேறும் ஆதிவாசி மக்கள்
அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராமத்தை விட்டு மூப்பர்காடு ஆதிவாசி மக்கள் வெளியேறி வருகிறார்கள்.;
கொலக்கம்பை,
மேலூர் ஊராட்சிக்குட்பட்டது மூப்பர்காடு ஆதிவாசிகள் கிராமம். இந்த கிராமம் தமிழக கேரள எல்லை வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் தங்களின் அனைத்து அடிப்படை தேவைகளுக்கு 15 கி.மீட்டர் தூரமுள்ள கொலக்கம்பைக்கு தான் வந்து செல்ல வேண்டும். மேலும் இங்கு வசிக்கும் மக்கள் சிலர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கும், பலர் பழனியப்பா, கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கும் வேலைக்கு அன்றாடம் சென்று வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்தம் 72 குடும்பங்கள் இருந்த இந்த கிராமத்தில் தற்போது 42 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகள் பழுதாகி கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. மேலும் குடிநீர், சாலை உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
இது குறித்து மேலூர் ஊராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலர் ராஜூ கூறியதாவது:–
மேலூர் ஊராட்சிக்குட்பட்ட மூப்பர்காடு ஆதிவாசி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்தம் 72 குடும்பங்கள் வசித்து வந்தனர். இங்கு வசித்த மக்கள் பெரும்பாலனோர் பழனியப்பா, கொலக்கம்பை, உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்றாடம் வேலைக்கு சென்று வந்தனர். மேலும் சிலர் மூப்பர்காடு பகுதிகளில் ஆடு வளர்த்தும், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு சென்றும் பயன்பெற்று வந்தனர். தற்போது பெரும்பாலான தேயிலை தோட்டங்களுக்கு வட மாநிலத்தவர்கள் வந்ததால் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. இதனால் கிடைக்கும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாததால் இங்குள்ளவர்கள் முள்ளி, கீழ்மனார், அகழி உள்ளிட்ட கிராமங்களுககு இடம் பெயர்ந்தனர். இதனால் தற்போது 42 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். மேலும் அரசு துறை அதிகாரிகள், போலீசார் அவ்வப்போது மூப்பர்காடு கிராமத்துக்கு வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு செல்கின்றனர். ஆனால் குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை.
மேலும் இப்பகுதியல் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறினார்கள். இதுவும் நடைமுறைக்கு வரவில்லை. சுல்தானா கிராமத்தில் இருந்து தான் மூப்பர்காடு கிராமத்திற்கு குழாய் குழாய் மூலம் குடிநீர் வருகிறது. இதனை காடடுயானைகள் உடைத்து சேதப்படுத்தி வருவதால் அடிக்கடி குடிநீர் வருவதில்லை. இந்த பிரச்சினைக்கு நிரத்தர தீர்வு காணப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து முப்பர்காடு கிராமத்தை சேர்ந்த பெருமாள் கூறியதாவது:–
மூப்பர்காடு கிராமத்தில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் ஓடுகளால் ஆனது. இதற்காக அமைக்கப் பட்ட மரங்களை கரையான்கள் அரித்து விட்டன. இதனால் ஓடுகள் விழுந்து விடுகிறது. இதனை சீரமைத்து கொடுக்க வில்லை. மேலும் அந்த வீடுகளில் குடியிருக்க முடிவது இல்லை. இதனால் வீட்டின் மேற்கூரைகளை இரும்பு கம்பிகள் மூலம் சிமெண்டு சீட்டு மேற்கூரை அமைத்து தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தனி நபர் இல்ல கழிப்பிடம் கட்ட குடியிருப்புகளுக்கு முன்பு குழிகள் தோண்டப்பட்டன. அதன்பிறகு பணிகள் நடைபெறவில்லை. குழிகள் அப்படியே கிடப்பதால் குழந்தைகள் தவறி விழுந்து விடுகிறார்கள்.
குடிநீர், சாலை, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யபடாத காரணத்தினாலே பெரும்பாலான மக்கள் கிராமத்தை காலி செய்து இடம் பெயர்ந்து வருகின்றனர். எனவே அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய வளர்ச்சி பணிகளை மேற்கொண்டால் மட்டுமே மீதமுள்ள மக்கள் இந்த பகுதியில் வசிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.