ரூ.1,290 கோடி செலவில் முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்

ரூ.1,290 கோடி செலவில் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் எடுக்கும் திட்டம் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2017-07-09 22:15 GMT

மதுரை,

மதுரை மாநகராட்சி பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் ரூ.27.50 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ரூ.1,290 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு அணையில் இருந்து நேரடியாக குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் ஆவியாகுதல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் பொதுமக்களுக்கு முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியும். எனது வாழ்நாளில் மதுரை மாவட்ட மக்களுக்கு ஏதாவது மிகப்பெரிய திட்டத்தை செய்ய வேண்டும் என்று போராடி கொண்டு இருந்தேன். அதற்கு முத்தாய்ப்பாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

இந்த திட்டமானது 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். தற்போது 40 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 125 எம்.எல்.டி குடிநீர் கொண்டு வர இருப்பதால் அடுத்த 60 ஆண்டுகளுக்கு மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையே ஏற்படாது.

காளவாசல், கோரிப்பாளையம், பெரியார் நிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் உயர்மட்டப் மேம்பாலங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். மேலும் அச்சம்பத்து, விராட்டிபத்து, துவரிமான் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதனை தவிர்க்கும் வகையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன. கோச்சடை முதல் துவரிமான் வழியாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படுவது குறைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகர பொறியாளர் மதுரம், உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிபொறியாளர் பாபு, சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் கோபால் உள்பட மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்