வெள்ளகோவில், முத்தூர், மூலனூர் பகுதியில் ஓப்பன் எண்ட் மில்களில் உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது

வெள்ளகோவில், முத்தூர், மூலனூர் பகுதியில் ஓப்பன் எண்ட் மில்களில் நேற்று உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது. இதனால் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Update: 2017-07-09 22:00 GMT

வெள்ளகோவில்

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில், மூலனூர், முத்தூர் பகுதிகளில் சுமார் 100 ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் (கழிவு பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஆலைகள்) உள்ளன. இந்த மில்களில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் நூல்களை ஈரோடு பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் வாங்கி சென்று போர்வை, டவல்கள் போன்ற துணிகளை உற்பத்திசெய்கிறார்கள்.

இந்த நிலையில் ஜவுளி ரகங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கடந்த இரு வாரமாக வெள்ளகோவில் பகுதியில் உள்ள ஓப்பன் எண்ட் மில்களில் உற்பத்தியாகும் நூல்கள் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

இதன்காரணமாக மில்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே, ஜூலை மாதம் 9–ந் தேதி(நேற்று) முதல் வருகிற 12–ந்தேதி (நாளை மறுநாள்) வரை 4 நாட்கள் மில்களில் உற்பத்தி நிறுத்தம் செய்ய வெள்ளகோவில், மூலனூர், முத்தூர் பகுதி ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் முடிவுசெய்தனர்.

அதன்படி நேற்று முதல் வெள்ளகோவில், மூலனூர், முத்தூர் பகுதியில் உள்ள ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக இந்த மில்களில் வேலை செய்யும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்