மணல் கடத்தல்; 16 பேர் கைது
மணல் கடத்தல் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் பாலாற்றில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமாருக்கு தகவல் வந்தது. இதையொட்டி அவர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டது. மணல் கடத்தி வந்த தேனம்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 21), அர்ஜுனன் (26), ஓரிக்கை கணேசன்நகரை சேர்ந்த காண்டியப்பன் (29), வெங்கடேசன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பாலுச்செட்டிசத்திரத்தை அடுத்த மேட்டுபாளையம் பகுதியில் மாட்டு வண்டிகளின் மணல் கடத்தப்படுவதாக பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அவர் அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த அறிவழகன் (45), முருகன் (52), அருளழகன்(44), குமார் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பிள்ளையார்பாளையம்
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம், தாயார்குளம், கிருஷ்ணன் தெரு பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் லாரிகளில் மணல் கடத்துவதாக பெரிய காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, துளசி ஆகியோருக்கு புகார்கள் வந்தது. அதையொட்டி அவர்கள் போலீசாருடன் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது. அதையொட்டி காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த மனோபாபு (23), கீழம்பியை சேர்ந்த ராஜி (28), கருணாகரன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புன்னப்பாக்கம்
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் புன்னப்பாக்கம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டுவண்டியை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த புன்னப்பாக்கத்தை சேர்ந்த டில்லிபாபு (25) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
ஆந்திராவில் இருந்து...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
மணல் கடத்தி சென்ற 4 லாரிகளை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
இது குறித்து மேற்கண்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர்களான கும்மிடிப்பூண்டியை வி.எம்.தெருவைசேர்ந்த சோமு (38), பெரிய பனங்காடு கிராமத்தை சேர்ந்த விஜய் (37) மற்றும் லாரி டிரைவர்களான சுண்ணாம்புகுளத்தை சேர்ந்த சதாசிவம் (33), பெரியபனங்காடு கிராமத்தை சேர்ந்த வினோத் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணலுடன் 4 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.