சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ரகளை; 14 பேர் கைது
சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட 14 கல்லூரி மாணவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர் வழியாக ஆந்திராவின் எல்லை பகுதி வரை பயணிகள் மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. தமிழகத்திலே இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தான் மிக அதிக அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து தான் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது.
இதனால் மூர்மார்க்கெட் ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மூர்மார்க்கெட் ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் கூச்சலிட்டபடி வந்து கொண்டிருந்தனர். இதை பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஒருவர் அவர்களை எச்சரித்து ரெயில் நிலையத்தில் கூச்சலிடக் கூடாது என்று சொன்னார். ஆனால் அந்த மாணவர்கள் அவர் பேச்சை கேட்காமல் தொடர்ந்து கூச்சலிட்டபடியே ரெயில் நிலையத்திற்குள் ரகளையில் ஈடுபட்டனர்.
தொடர் புகார்கள்
உடனே அந்த பாதுகாப்பு படை வீரர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் வந்த மூர்மார்க்கெட் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ரெயில் நிலையத்தில் கூச்சலிட்ட 14 கல்லூரி மாணவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அழகர்சாமி கூறும்போது:-
சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் சில நேரங்களில் கல்லூரி மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டு வருவதாக பயணிகளிடம் இருந்து தொடர் புகார்கள் வந்தன.
நடவடிக்கை
அதன் பேரில், பயணிகள் பாதுகாப்பு கருதி பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் கல்லூரி மாணவர்களை கண்காணிக்க மாற்று உடையில் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவர்கள் 14 பேர் ரெயில் நிலையத்திற்குள் கூச்சலிட்டபடி வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் எச்சரிக்கையும் மீறி அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்தனர்.
அதனால் அந்த 14 கல்லூரி மாணவர்கள் மீது பயணிகளுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். ரெயில் நிலையங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.