காலிப்பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி சென்னையில் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி சென்னையில் வருகிற 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2017-07-08 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராஜன் வரவேற்றார். பொதுச்செயலாளர் தியாகராஜன், மாநில பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநில பொதுச்செயலாளர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்கள் பணிமாறுதல், கலந்தாய்வு மூலம் வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவத்துறை நிர்வாக பணியாளர்களுக்கு 10 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை வரன்முறை செய்து உடனடியாக வழங்க வேண்டும்.


ஊதிய மாற்றத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் (பெருந்திரள்முறையீடு) நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர்கள் பிரபுராம், பாஸ்கரன், விவேகானந்தன், செயலாளர்கள் தங்கவேலு, நம்பிராஜன், சரளா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில தலைவர் லட்சுமணன், சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் செல்வராஜன், அனிதாகுமாரி ஆகியோர் பாராட்டப்பட்டனர். முடிவில் மாநில செயலாளர் அசோகன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்