முழு அடைப்பு போராட்டத்தால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் ஓடவில்லை

முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் ஓடவில்லை. விழுப்புரம் பஸ்கள் மதகடிப்பட்டு வரை இயக்கப்பட்டன.

Update: 2017-07-08 22:45 GMT

கடலூர்,

புதுச்சேரி சட்டமன்றத்தில் மாநில அரசின் பரிந்துரையின்றி பா.ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கை புதுச்சேரியில் பல்வேறு அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும், கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. சில பஸ்கள் மாநிலத்தின் எல்லைவரை சென்று வந்தன.

கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் இருந்தும் நேற்று புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர் பஸ்நிலையத்தில் புதுச்சேரி பஸ்கள் நிற்கும் இடம் வெறிச்சோடி கிடந்தது. வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர் வழியாக புதுச்சேரி செல்லும் பஸ்களும் கடலூர் பஸ்நிலையம் வரை வந்து திரும்பி சென்றன.

கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு சென்று வரும் பஸ்கள் அனைத்தும் நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம், மாளிகைமேடு, கோலியனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர், புதுச்சேரி வழியாக சென்னை சென்று வரும் பஸ்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படாததால் கடலூரில் இருந்து புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிக்கு செல்லும் ஊழியர்கள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல இருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரி பகுதிகளுக்கு கடலூரில் இருந்து குறைந்த அளவில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் ஓடாததால் ஷேர் ஆட்டோக்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இந்த பஸ்கள் மதகடிப்பட்டு வரை மட்டுமே இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து புதுச்சேரி செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சிலர், விழுப்புரத்தில் இருந்து பயணிகள் ரெயிலில் புதுச்சேரிக்கு சென்றனர்.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு 15 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ்கள் இயக்கப்படும். இதனால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் புதுச்சேரி பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் நேற்று புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பிற இடங்களில் இருந்தும் நேற்று புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்